அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமைக்கான தொடர் முயற்சி, சில தினங்களில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடவுள்ளதாக நிதித்துறை செயலாளர் உறுதியளித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் "பழைய ஓய்வூதியத் திட்டம்" (OPS) என்ற முதன்மைக் கோரிக்கையை நோக்கி நகர்வதற்கான இடைக்கால நிதி மேலாண்மைத் தீர்வாக TAPS திட்டத்தின் மூலம், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள நமது சக ஊழியர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசுக்கு விரிவான கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அம்மனுவில் TAPS திட்டத்தின் படி தற்காலிக ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கிடத் தேவையான நிதி ஒதுக்கீட்டு வழிகாட்டுதல்களை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தீர்வை முறைப்படுத்துவதோடு, எங்களின் முதன்மைக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) முழுமையாகச் செயல்படுத்துவதற்கான முறையான திட்டமிடல்களையும், நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளையும் நிதித்துறை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியக் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எம். ஏ. சித்திக், IAS அவர்களிடம் மாநிலத்தலைவர் தலைமையிலான பிரதிநிதிகள் மூலம் விரிவாக முறையீடு செய்யப்பட்டது. மனுவை கனிவோடு பரிசீலித்த நிதித்துறை செயலாளர் அவர்கள், இன்னும் இரண்டு தினங்களில் பணி ஓய்வு பெறுபவர்களுக்கு, உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (Guaranteed Pension Scheme / TAPS) மூலமாக நிதி ஒதுக்கீடு மற்றும் பென்ஷன் சார்ந்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines) வெளியிடப்படும் என்று நமது மாநிலத்தலைவர் ஆ.மணிகண்டன் அவர்களிடம் மிக முக்கியத்துவம் வாய்ந்த உறுதியினை அளித்துள்ளார். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, இன்னும் இரு தினங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்துள்ள நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அறிவிக்கப்படவுள்ள இந்த நெறிமுறைகள் தற்காலிக நிம்மதியைத் தருவதோடு, நமது இறுதி இலக்கான "பழைய ஓய்வூதியத் திட்டம்" முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கான முதல் படியாக அமைய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு